மும்பை,
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து துபாய் நகருக்கு 62 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இன்று காலை புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது காக்பிட் அறையில் இருந்து எரிந்து கருகும் வாடை வந்தது.
இதையடுத்து, விமான பயணிகள் பீதி அடைந்தனர். உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளை, ஏர் இந்தியா விமானி தொடர்பு கொண்டு அனுமதி கேட்டார். உரிய அனுமதி கிடைத்ததையடுத்து மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானி அறையில் சோதனை நடைபெற்றது. தீ பிடித்தாக எதுவும் தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஜினியர்கள் தொடர்ந்து விமானத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து கேட்க ஏர் இந்தியா அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.