மும்பை,
மராட்டிய மாநிலத்தில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக விமானத்தில் நேற்று காலை பயணம் செய்தார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.
இந்த நிலையில், விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது. முன்னதாக விமானத்தை விமானி சுமித் கபூர், துணை விமானி சாம்பவி பதக் ஆகியோர் இயக்கினர். பணிப்பெண் பிங்கி மாலி, அஜித்பவாரின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ் ஆகியோரும் உடன் இருந்தனர்.
விமானம் பாராமதி விமான நிலையத்தை நெருங்கியதும் அங்கு தரையிறங்க முயற்சி செய்தது. ஆனால் திடீரென காலை 8.45 மணிக்கு விமானம், ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகி சென்றது. அப்போது விமானிகள், விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த விமானம், பாராமதி விமான நிலைய ஓடுபாதை அருகில் உள்ள திறந்தவெளி பகுதியில் விழுந்து நொறுங்கியது. தரையில் விழுந்தவுடன் விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அஜித் பவார் உள்பட, விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் உயிரிழந்தனர். அஜித்பவாரின் திடீர் மறைவு கட்சி வேறுபாடு இன்றி மராட்டிய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக அவரது சொந்த ஊரான பாராமதி சோகத்தில் மூழ்கியது.
மரணம் அடைந்த அஜித் பவாருக்கு வயது 66. இவர் 6 முறை துணை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். இவரது மனைவி பெயர் சுனேத்ரா பவார், மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அஜித்பவாருக்கு பார்த் பவார், ஜெய் பவார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அஜித் பவாரின் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து நடந்த இடத்தில் டி.ஜி.சி.ஏ. அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில், அஜித் பவார் பயணம் செய்த விமானத்தின் கருப்பு பெட்டியை அதிகாரிகள் மீட்டுள்ளனர். விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் தரையிறங்க வேண்டாம் எனவும், தொடர்ந்து பறக்குமாறும் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விமானத்தின் தரவுகள், விமானிகளின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்பு பெட்டியை ஆய்வு செய்வதன் மூலம் விபத்து குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் அஜித் பவாரின் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரது உடலுக்கு மத்திய மந்திரி அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் மராட்டிய முதல்-மந்திரி உள்பட மாநிலத்தின் முக்கிய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் அஜித் பவார் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அஜித் பவாரின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.