புதுடெல்லி,
மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரியாக எம்.ஜே. அக்பர் பதவி வகித்து வருகிறார். இவர் அரசியலுக்கு வரும் முன் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றியவர். அவருக்கு கீழ் பணிபுரிந்தபோது எம்.ஜே.அக்பர் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 2 பெண் பத்திரிகையாளர்கள் அண்மையில் குற்றம்சாட்டி இருந்தனர்.
அதன்பின்னர் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது அடுத்தடுத்து பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினர். தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மீடூ ஹேஸ்டேக்கில் தங்களது குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர். இதுபற்றி விசாரணை நடத்த பா.ஜனதா முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் இன்று நாடு திரும்பினார். அவரிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, பின்னர் அறிக்கை வெளியிடப்படும் என கூறி சென்று விட்டார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு இணை மந்திரி அக்பர் மின்னஞ்சலில் தனது பதவி விலகல் கடிதத்தினை அனுப்பி உள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
இதனை தொடர்ந்து அவர் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.