தேசிய செய்திகள்

உ.பி. மெகா கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டது! மாயாவதி -அகிலேஷ் யாதவ் கைகோர்ப்பு

2019 பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

லக்னோ,

ஏப்ரல்-மேயில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்க முயற்சி செய்கிறது. 80 பாராளுமன்றத் தொகுதிகளை கொண்ட உ.பி. எந்த கட்சி ஆட்சியில் அமரும் என்பதை தீர்மானம் செய்வதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. 2014-ல் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றியை தனதாக்கியது. 73 தொகுதியை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியது. பிற தொகுதிகளை காங்கிரஸ், சமாஜ்வாடி வென்றது. 2017 சட்டசபைத் தேர்தலிலும் சமாஜ்வாடி பா.ஜனதாவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

சமாஜ்வாடி கட்சியின் தலைமையில் குடும்ப சண்டை காரணமாக ஏற்பட்ட பிளவால், பா.ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமானது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிரும் புதிருமாக இருக்கும் கட்சிகளாகும். இப்போது மாநிலத்தில் பா.ஜனதா அசுரவேகமாக வளர்ந்திருப்பதை முடிவுக்கு கொண்டுவர இரு கட்சிகளும் ஒன்றாக இணைய திட்டமிட்டு வருகிறது. கடந்த வருடம் கோரக்பூர், பூல்பூரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாயாவதி, சமாஜ்வாடி கட்சி வெற்றியை தனதாக்கியது. இது கூட்டணிக்கான அஸ்திவாரத்திற்கு வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் அமேதி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகி வருகிறார்கள். மெகா கூட்டணியென்றால் காங்கிரசுக்கும் தொகுதிகளை வழங்க வேண்டும் என்ற எண்ணம் இரு கட்சிகள் இடையே நிலவுவதாக தெரியவந்தது. தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொள்ளலாம், கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் கூறியது. இதற்கிடையே 40/ 40 என சரிசமமாக பிரித்து போட்டியிடலாம் என்ற திட்டத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் காங்கிரஸ் மெகா கூட்டணியிலிருந்து கழற்றிவிடப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் சந்தித்து மெகா கூட்டணி குறித்து பேசியதாகவும் அவர்கள் காங்கிரசின் மீது அதிருப்தி தெரிவித்ததாகவும் கூட்டணியில் காங்கிரசை இணைக்க விரும்பவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருப்பினும் கூட்டணியில் சிறிய கட்சிகளுக்கு இடமளிக்க இருவரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித் சிங்கின் ராஷ்டீரிய லோக் தள் கட்சிக்கு மூன்று தொகுதிகள் கொடுக்கப்படலாம் எனவும், ஜனவரி 15-ம் தேதிக்கு பின்னர் தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவுகள் எடுக்கப்படுகிறது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்