தெலுங்கானா,
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு குலாப் பெயரிடப்பட்டது. இது நேற்று 6 மணி முதல் கலிங்கப்பட்டணம்-கோபால்பூருக்கு இடையே கரையை கடக்க தொடங்கியது. இரவு 9.30 மணிக்குள் முற்றிலுமாக கரையை கடந்தது.
அப்போது சூறைக்காற்றுடன், பலத்த மழையும் கொட்டியது. இதனால் ஆந்திராவின் வட பகுதி மற்றும் ஒடிசாவின் தெற்கு கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வீடுகளின் கூரைகள் பறந்தன. புயல் கரையை கடந்த போது பலத்த மழையும் கொட்டியதால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
இந்நிலையில், குலாப் புயல் காரணமாக தெலங்கானாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை மூடப்படும் என முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.