தேசிய செய்திகள்

அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியை நீக்க நடவடிக்கை

மருத்துவ கல்லூரி வழக்கில் முறைகேடு புகார் எதிரொலியாக அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீ நாராயண் சுக்லாவை பதவி நீக்கம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு பரிந்துரைத்து உள்ளது.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் ஸ்ரீ நாராயண் சுக்லா. இவர், சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில், உத்தரபிரதேச மாநில தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அந்த கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. இதேபோல் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சில வழிகாட்டும் நெறிமுறைகளை சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவாக பிறப்பித்து இருந்தது.

இவற்றை மீறி சுக்லா, தனியார் மருத்துவ கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளித்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. அவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த உத்தரவை பிறப்பித்ததாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு கடந்த நவம்பர் மாதம் புகார்கள் வந்தன.

இதைத்தொடர்ந்து இந்த முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சிக்கிம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.கே.அக்னிஹோத்ரி, மத்திய பிரதேச ஐகோர்ட்டு நீதிபதி பி.கே.ஜெய்ஸ்வால் ஆகியோர் கொண்ட மூவர் குழுவை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமைத்தார்.

இந்த மூவர் குழு அண்மையில் நீதிபதி சுக்லா மீது கூறப்பட்ட முறைகேடு புகார் குறித்து தீவிர விசாரணை நடத்தி முடித்தது. பின்னர் இது தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியிடம் தாக்கல் செய்தது. அதில் சுக்லா மீது பாதகமான கருத்துகள் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து அலகாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுக்லா குறித்து மூவர் விசாரணை குழு கூறிய கருத்துகள் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, தானாக முன்வந்து பணியில் இருந்து ஓய்வு பெறுமாறு அவரை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்து அவர் பணியில் இருந்து தானாக ஓய்வு பெற மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், நீதித்துறை பணிகளில் இருந்து சுக்லா விலகி இருக்கும்படி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அவரை அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அலகாபாத் ஐகோர்ட்டின் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளின் வரிசைப் பட்டியலில் நேற்று சுக்லாவின் பெயர் இடம் பெறவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் உத்தரவு காரணமாகவே அவர் நீதித்துறையின் அனைத்து பணிகளில் இருந்தும் திரும்பப் பெறப்பட்டு உள்ளார் எனத் தெரிய வருகிறது. இதனால் சுக்லா கடந்த ஒரு வாரமாக அலகாபாத் ஐகோர்ட்டு பணிகள் எதிலும் பங்கேற்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி நீதிபதி சுக்லாவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, என்னை தனியாக இருக்க விடுங்களேன் என்று மட்டும் கூறி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

நீதிபதி சுக்லா தானாக முன்வந்து ஓய்வு பெற மறுத்துவிட்டதால் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு இனி சுப்ரீம் கோர்ட்டு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சுக்லா மீதான பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் தெரிவித்து பதவி நீக்கம் செய்ய விரும்பும் தனது முடிவை பரிந்துரை செய்வார்.

ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றால் இந்திய அரசியல் சாசனத்தில் அதற்கென சில சட்ட விதிமுறைகள் கூறப்பட்டு உள்ளன. நீதிபதியின் தவறான நடவடிக்கை அல்லது இயலாமை குறித்து நீதிபதிகள் மீதான விசாரணை சட்டத்தின் (1968) கீழ் மட்டுமே இதனை விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்