புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்று வரும் 3-வது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கிவைத்தார். பின்னர், மத்திய கலாசாரத்துறை மந்திரி பிரகலாத்சிங் படேலை அவருடைய அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
அப்போது கீழடி அகழாய்வின் 4-ம் கட்ட அறிக்கையினை மத்திய மந்திரியிடம், அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்கினார். மேலும், கீழடியின் தமிழர் பெருமைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்றினை உருவாக்க மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் சென்னை அரசு அருங்காட்சியகத்தை உலகத்தரத்திற்கு கொண்டு செல்ல ரூ.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழகத்தில் அடுத்தக்கட்ட அகழாய்வு பணிக்காக கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களுக்கு அனுமதி அளித்திடவும், வைகை நதிக்கரையில் ஆய்வு நடத்தியதுபோல, தாமிரபரணி நதிக்கரையிலும், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ஆய்வு செய்ய அனுமதி வழங்கவும் கோரிக்கை வைத்தார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.பாண்டியராஜன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ்பொக்ரியாலை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது, உலகெங்கும் ஆயிரம் தமிழ் வளர் மையங்களை அமைப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் செயல்படும் தமிழ்ச் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு முழுநேர இயக்குனர் நியமிப்பது தொடர்பாகவும் பேசினார். மேலும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கும், புரட்சித்தலைவி அம்மா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்துக்கும் கட்டமைப்புகளை வலுப்படுத்த நிதி கோரினார்.
பின்னர், மத்திய விமான போக்குவரத்துத்துறை செயலாளர் பிரதீப்சிங் கரோலாவையும் சந்தித்து, தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் மற்றும் வந்தடையும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வழங்கினார்.