புதுடெல்லி,
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் பற்றி மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த நிபுணர் டிரைடா பார்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறும்போது, கடந்த ஆண்டு ஜூனில் ஈரான், இஸ்ரேல் இடையேயான மோதலின்போது அமெரிக்கா தாக்கியபோது, ஈரான் தாக்குதலை தடுக்கவே விரும்பியது.
அதனால், கத்தாரில் யாருமில்லாத அமெரிக்க தளம் மீது அடையாளத்திற்காக ஒரு தாக்குதலை நடத்தி விட்டு நிறுத்தி கொண்டது. ஆனால், இந்த முறை அமெரிக்கா தாக்கினால், ஈரான் அதனை போராக நினைத்து, கடுமையான பதிலடியை கொடுக்கும்.
அதனாலேயே, 2 வாரங்களுக்கு முன்னர், போரிட தயாராக இருந்த டிரம்ப், பின்னர் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதுபோன்ற பெரிய போரை நடத்த போதிய ஆயுதங்கள் தங்களிடம் இல்லை என டிரம்ப் உணர்ந்திருப்பார் என கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அயோவா மாகாணத்தில் நேற்று திரளாக கூடியிருந்த மக்களின் முன் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுவது போன்று பேசினார். அவர் பேசும்போது, ஈரானை நோக்கி அமெரிக்காவின் அழகிய கப்பல் மிதந்தபடி வருகிறது. அதனால், அவர்கள் முதலில் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொள்வார்கள் என நம்புகிறேன் என பேசினார்.
ஆனால், அமெரிக்கா தாக்கினால், பதிலுக்கு அமெரிக்க படைகளை ஈரான் துவம்சம் செய்ய தயாராக இருக்கிறார்கள். டிரம்ப் ராணுவ ரீதியாக வெற்றி பெறலாம் என்றாலும் அரசியல் ரீதியாக தோல்வியை அடைவார். அந்த வேலையை ஈரான் செய்யும். அதனை தவிர்க்கவே டிரம்ப் பின்வாங்கி உள்ளார் என்றும் டிரைடா கூறியுள்ளார்.