புதுடெல்லி,
குஜராத்தில் உலகின் மிகப்பெரிய சிலையாக படேல் சிலையை அமைக்கப் போவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதன் படி, பட்டேலின் 143 வது பிறந்ததினமான அக்டோபர் 31-ம் தேதி 182 அடி உயரமுடைய இச்சிலையை நர்மதா நதிக்கரையில் நிறுவி, திறந்து வைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். ஆனால் இந்த சிலையின் பின்பக்கத்தில் மேட் இன் சைனா என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதை ராகுல் சுட்டிக் காட்டியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் சட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, குஜராத்தில் பட்டேலுக்கு மோடி சிலை அமைக்கிறார். இது உலகின் உயரமான சிலை. நல்ல வேலைபாடுடையது. ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பட்டேலை அவமதிக்கும் செயல். ஆனால் இது சீனாவில் செய்யப்பட்டதில்லை என கூறுகிறார்கள். சிலையின் பின்புறம் மேட் இன் சீனா என இடம்பெற்றுள்ளது. சீன இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை இது தந்துள்ளது என்று விமர்சித்தார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ள அமித்ஷா, தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ராகுல் காந்தி, உங்களின் குடும்பம் சர்தார் படேலை அவமதித்தது, மக்களின் மனதில் இருந்து அவரது பாரம்பரியத்தை அழிக்க முயன்று தோற்று போனது. ஒற்றுமைக்கான சிலை விவகாரத்தில் உங்களின் பொய்,. சர்தார் படேலுக்கு எதிராக நீங்கள் கொண்டுள்ள வன்மத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது இவ்வாறு அவர் தெரிவித்தார்.