புதுடெல்லி,
டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது:-
டெல்லியில், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் நடக்கும் ஷாகீன் பாக் பகுதியில் சாலைகளை பா.ஜனதா சுத்தம் செய்யவில்லை. ஆட்சியை பிடிப்பதற்காக மலிவான அரசியல் செய்கிறது. டெல்லிக்கு பா.ஜனதா என்ன செய்தது, அந்த கட்சிக்கு எதற்கு ஓட்டுப்போட வேண்டும் என்று டெல்லி மக்கள் கேட்கிறார்கள். முதல்-மந்திரி யார் என்பதை நான் தீர்மானிப்பேன் என்று அமித்ஷா சொல்கிறார். எப்படி உங்களுக்கு வெற்று காசோலையை மக்கள் அளிப்பார்கள்? அவர்கள் முட்டாள்கள் அல்ல.
நான் திறந்த மனதுடனும், நேர்மையுடனும் அமித்ஷாவுக்கு அழைப்பு விடுக்கிறேன். எந்த பிரச்சினை பற்றியும் அவர் டெல்லி மக்கள் முன்னிலையில் என்னுடன் பொது விவாதம் நடத்த வரவேண்டும். அதற்கான நேரம், இடத்தை அவரே முடிவு செய்யலாம் என்று அவர் பேசினார்.