பெங்களூரு,
முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு எதிராக பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. தொடர்ந்து பேசி வருகிறார். மே மாதம் 2-ந் தேதிக்கு பிறகு எடியூரப்பா ராஜினாமா செய்வார் என்று அவர் ஏற்கனவே கூறி இருந்தார். இந்த நிலையில் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்திற்கு வரும் பா.ஜனதா தேசிய நிர்வாகிகள், புறப்படுவதற்கு முன்பு என்னை திட்டிவிட்டு செல்கிறார்கள். அவர்கள் விமானம் ஏறிய பிறகு சிரித்துவிடுவார்கள். இதன் மர்மம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். வரும் நாட்களில் அதை பகிரங்கப்படுத்துவேன். பா.ஜனதா மிகப்பெரிய கட்சி. என் மீது 10 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கை, பிரதமர் மோடிக்கு திருப்தியை தந்துள்ளது. அதனால் கட்சியை விட்டு என்னை நீக்குவது என்பது சாத்தியம் இல்லை.
எடியூரப்பாவின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வருகிறார்கள். எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு வழங்கியபோது, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, எங்கள் கட்சியின் தேசிய தலைவருக்கு எடியூரப்பாவின் ஊழல் குறித்து 11 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பினேன். அந்த நோட்டீசு வழங்கி 2 மாதங்கள் ஆகியும் எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.
அப்படி என்றால் எடியூரப்பாவுக்கு எதிராக நான் கூறிய ஊழல் குற்றச்சாட்டு உண்மை என்று அர்த்தம் இல்லையா?. என் மீது 0.1 சதவீதம் கூட நம்பிக்கை இல்லை என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் கூறியுள்ளார். உலகில் பூஜ்ஜியத்தை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால் கணக்கியலுக்கு மதிப்பே இல்லாமல் போய் இருக்கும். அருண்சிங் கணக்கு சோதனையாளராக இருக்கிறார். அதனால் அவர் என் மீது நம்பிக்கை குறித்து பேசியுள்ளார்.
எடியூரப்பாவுக்கு எதிராக ஒவ்வொருவராக அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். எடியூரப்பா பா.ஜனதாவின் உரிமையாளர் இல்லை என்று சி.டி.ரவி கூறியுள்ளார். மந்திரி ஈசுவரப்பா பகிரங்கமாகவே எடியூரப்பாவுக்கு எதிராக பேசியுள்ளார். அடுத்த சில நாட்களில் பா.ஜனதா தலைவர்கள் அனைவரும் எடியூரப்பாவுக்கு எதிராக பேசுவார்கள். காங்கிரசின் குடும்ப அரசியல் குறித்து நான், எடியூரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர், பிரகலாத்ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறோம். ஆனால் பா.ஜனதாவிலேயே குடும்ப அரசியல் நடக்கிறது.
என்னை கட்சியை விட்டு நீக்க வேண்டாம் என்று யாரையும் கேட்க மாட்டேன். என்னை கட்சியை விட்டு நீக்குவதை விட எடியூரப்பாவின் ஊழல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். போக்குவரத்து ஊழியர்களுடன் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். பஸ்கள் கொள்முதல், பழைய பஸ்கள் விற்பனையில் ஊழல் நடக்கிறது. இதனால் தான் கே.எஸ்.ஆர்.டி.சி. நஷ்டத்தில் உள்ளது. ஊழியர்களுக்கு அனைத்து சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.