புதுடெல்லி,
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை இணை மந்திரி அனந்தகுமார் ஹெக்டே. இவர் கர்நாடகாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சாதி பெயரை சொன்னால் அது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் மதசார்பற்றவர்கள் என்று சொல்பவர்களுக்கு சொந்த அடையாளம் கிடையாது. அவர்களுக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் இன்றும் எதிரொலித்தது. மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டேயின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன் கார்கே கடும் கண்டனம் தெரிவித்தார். மத்திய மந்திரி தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன் கார்கே வலியுறுத்தினார்.
இதற்கு மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே பதில் அளிக்கையில், நான் பாராளுமன்றத்தையும், அரசியல் சாசனத்தையும் மதிக்கிறேன். அது போல அம்பேத்கரையும் மிகவும் மதிக்கிறேன். அரசியல் சட்டம் என்பது மிகவும் உயர்ந்தது. இந்திய குடிமகனாக நான் அதற்கு எதிராக செயல்பட மாட்டேன் என்றார். தொடர்ந்து தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் அனந்தகுமார் ஹெக்டே கூறினார்.