உண்ணாவிரதம்
தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவரும், முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவின் அரசு வேலைவாய்ப்புகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடவில்லை என்பதால் சுனில் நாயக் என்ற இளைஞர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.இந்த தற்கொலைக்கு நீதி கேட்டு ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா, அவருடைய தாய் ஜெயம்மா ஆகியோர் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 நாள் போராட்டத்திற்கு அனுமதி கோரிய நிலையில் ஒருநாள் மட்டுமே அனுமதி வழங்கிய அரசு, சர்மிளாவை கைது செய்து காவலில் வைத்தது.
இதுகுறித்து சர்மிளாக கூறியதாவது:-
சகல வசதிகளும் கொண்ட அரசுக்கு வேலையில்லா இளைஞர்களின் கஷ்டங்கள் புரியாது. என்னை இங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். என்னை நீங்கள் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ கொண்டு போனாலும் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே போலீஸ் காவலில் இருந்து 5 மணி நேரத்திற்கு பிறகு விடுதலையான சர்மிளா நேற்று காலை முதல் வீட்டில் இருந்தபடியே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். தெலுங்கானாவில் விரைவில் சர்மிளா கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.