ஐதராபாத்
ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் கே.பி.தொடி கிராமத்தில் சிறுமி ஒருவர் 20 வயது வாலிபர் மீது காதல் கொண்டு அவருடன் ஓடிப்போனதாக கூறப்படுகிறது.
வைரலான வீடியோவில், 20 வயது இளைஞன் தரையில் அமர்ந்திருக்கிறான். கிராமத்து பெரியவர் ஒருவர் சிறுமி அளிக்கும் பதிலில் கோபம் அடைந்து அந்த சிறுமியை பல முறை மீண்டும் மீண்டும் கன்னத்தில் அறைகிறார். முதலில் வெறும் கைகளாலும், பின்னர் ஒரு குச்சியாலும் தாக்கத் தொடங்குகிறார்.
இது குறித்து அனந்த்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு பி யேசுபாபு கூறும்போது,
கிராமத்து பெரியவர் மீது புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை, அந்த ஜோடிக்கு பெற்றோர் கூட இல்லை. பெரியவர் தங்கள் சார்பாக தலையிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். எனவே அவர்கள் புகார் செய்ய தயாராக இல்லை என கூறினார்.
சிறுமி புகார் அளிப்பாரா என விசாரணை நடத்த காவல்துறை இப்போது ஒரு பெண் கான்ஸ்டபிளை அனுப்பியுள்ளது. வாலிபர் சிறுமியுடன் உடல் ரீதியான உறவைக் கொண்டிருப்பதாக தெரியவந்தால், அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் அல்லது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு பதிவு செய்யப்படலாம்.
முறையான புகார் எதுவும் பதிவு செய்யப்படாவிட்டால், எஸ்சி / எஸ்டி தாக்குதல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்வார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.