தேசிய செய்திகள்

கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம்.. காதலன் நடத்திய கொடூரம்

கள்ளத்தொடர்பை துண்டித்ததால் ஆத்திரம் அடைந்த காதலன், தனது கள்ளக்காதலி மீது இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்.

சந்திரா லே-அவுட்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லே-அவுட் அருகே வசித்து வருபவர் அல்தாப் பாஷா. இவரது மனைவி பானு (வயது 34). இந்த தம்பதிக்கு கடந்த 15 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 3 குழந்தைகள் உள்ளனர். பானு ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலைகளை செய்து வந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு சென்று விட்டு பிர்தோஸ் பானு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மநபர், பானுவை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், பானுவை அதே பகுதியை சேர்ந்த கபீஜ் என்பவர் கத்தியால் குத்திக் கொன்றதும், 7 முறை அவரது உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. கபீஜிக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது. பானு, கபீஜ் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. இதுபற்றி பானு குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, கபீஜுடன் இருந்த கள்ளத்தொடர்பை பானு துண்டித்து கொண்டார்.

இதனால் பானுவுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதுபற்றி போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பினரும் சமாதானமாக செல்வதாக போலீசாரிடம் கூறியநிலையில், கபீஜை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்திருந்தனர். இதன் காரணமாக ஆத்திரத்தில் இருந்த கபீஜ், வேலைக்கு சென்று வந்த பானுவை பின்தொடர்ந்து வந்து கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது. இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கபீஜை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.