தேசிய செய்திகள்

அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிர்ப்பு; தொகுதி மாறுவாரா?

அமேதி தொகுதியில் ராகுலுக்கு எதிர்ப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் தொகுதி மாறுவார் என்றும் கூறப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி.

கடந்த முப்பது வருடங்களாக அமேதி தொகுதி, இந்திரா காந்தி குடும்பத்தின் வாரிசு தொகுதியாக இருந்து வருகிறது. 2004 பாராளுமன்ற தேர்தலில் திடீர் என அரசியலில் குதித்த ராகுல் காந்தி, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமேதி தொகுதி விவசாயிகள் ராகுல் காந்தி மீது அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாராளுமன்ற தொகுதியில் உள்ள விவசாயிகள் நேற்று ராகுல் காந்திக்கு எதிராக முழக்கமிட்டனர். ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட நிலம் அவர்களுக்கு திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று கோரினார்கள்.

விவசாயி ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்

"நாங்கள் ராகுல் காந்தி மீது மிகவும் வருத்தமாக உள்ளோம். அவர் இத்தாலிக்கு திரும்ப வேண்டும். அவர் இங்கே இருக்க தகுதியற்றவர். ராகுல் எங்கள் நிலத்தை அபகரித்து கொண்டார்" என கூறினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்த தொகுதி எம்.பி.யாக இருந்தபோது சாம்ராட் சைக்கிள் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

1980-களில் கவுசார் தொழிற்துறை பகுதியில் ஒரு நிறுவனத்தை நடத்த, ஜெயின் சகோதரர்களுக்காக 65.57 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் நிறுவனம் நல்ல வர்த்தகத்தை செய்ய தவறிவிட்டது. பின்னர் 2014-ல் நிலம் ஏலத்தில் விடப்பட்டது.

1986 ஆம் ஆண்டில் 65.57 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்ததாக உ.பி. அரசு தொழில்துறை அபிவிருத்தி கார்ப்பரேஷன் (யுபிஎஸ்ஐடிசி) பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் கடனளிப்பு மீட்பு ஆணையத்தால் 2014-ல் ரூ. 20.10 கோடிக்கு விடப்பட்டு உள்ளது.

ஏலத்தில் வாங்கப்பட்ட நிலத்திற்கு ராஜீவ் காந்தி அறக்கட்டளை மூலம் ரூ.1,50,000 ஸ்டாம்ப் பணம் செலுத்தப்பட்டு உள்ளது.

முன்னதாக மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் விவசாயிகளின் நிலத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டி இருந்தார்.

30 வருடங்களாக காங்கிரஸ் கோட்டையாக இருந்த அமேதி தொகுதி தற்போது பலம் இழந்து வருகிறது. 1998 மக்களவை தேர்தலில் மட்டும் காங்கிரசின் வேட்பாளரான கேப்டன் சதீஷ் சர்மா, பாஜகவின் சஞ்சய்சிங்கிடம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தார்.

1999-க்கு பின் சோனியா காந்தி போட்டியிட தொடங்கிய பின் மீண்டும் அமேதியில் காங்கிரஸ் வலுப்பெற்றது.

இவரது தாய் சோனியா காந்தி அருகிலுள்ள ரேபரேலிக்கு மாற வேண்டி வந்தது. அமேதியில் ராகுலுக்கு 71 சதவிகித வாக்குகள் கிடைத்தன. ஆனால், அடுத்து வந்த தேர்தல்களில் இந்த சதவிகிதம் குறைந்து 2009-ல் 66, 2014-ல் 46 என்றானது.

அதேசமயம், பாஜகவிற்கு ஓரிலக்கத்தில் இருந்த வாக்கு சதவிகிதம் 2014-ல் 37 என்றானது. இந்தமுறை ராகுலை எதிர்த்து பாஜகவில் ஸ்மிருதி இராணி போட்டியிட்டிருந்தார். இதன் பிறகு பாஜகவின் கவனம் அமேதியில் அதிகரித்தது.

இதன் பலனாக கடந்த 2017-ல் நடைபெற்ற உபி சட்டப்பேரவை தேர்தலில் அமேதியின் ஐந்து தொகுதிகளில் பாஜகவிற்கு 4 கிடைத்தன. மீதியுள்ள ஒரு தொகுதியும் சமாஜ்வாதிக்கு சென்றதே தவிர அதை காங்கிரஸால் தக்க வைக்க முடியவில்லை.

இந்நிலையில், உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பல பாஜக தலைவர்கள் அமேதிக்கு பலமுறை வந்து கூட்டம் நடத்தினர். கடந்த வாரம் அமேதிக்கு வந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதியும் ரூ.77 கோடிக்கான வளர்ச்சித் திட்டங்களை சமீபத்தில் துவக்கி வைத்தார்.

இதனால், மீண்டும் போட்டியிடும் ஸ்மிருதிக்கு அமேதியில் ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, ராகுல் காந்தி வரும் தேர்தலில் தொகுதி மாறுவது நல்லது என உபி காங்கிரசார் அவருக்கு யோசனை கூறி உள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை