புதுடெல்லி,
தமிழக அரசு நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விலங்குகள் நல வாரியம் மற்றும் மிருகநல அமைப்புகள், ஆர்வலர்கள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அவர்களின் மனுக்கள் 30-ந் தேதி விசாரணைக்கு வருகின்றன.
ஒத்திவைப்பு
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது, காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைகளை சேர்த்து 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதன் காரணமாக 2015-ம் ஆண்டு, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற ஏதுவாக நிபந்தனைகளுடன்கூடிய அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் இந்த அறிவிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். இதன் மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.
கேவியட் மனு
இதற்கிடையே, ஜல்லிக்கட்டுக்காக நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, தமிழக அரசு ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்தது.
ஆனாலும் அந்த அவசர சட்டத்துக்கு எதிராக பீட்டா போன்ற அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டை நாடி, இடைக்கால தடை உத்தரவு எதுவும் பெற்றுவிடக்கூடாது என்று கருதி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த சனிக்கிழமை ஒரு கேவியட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கு எதிராக ஏதாவது வழக்குகள் வந்தால், தமிழக அரசின் கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என கோரப்பட்டுள்ளது. இது போன்று சுப்ரீம் கோர்ட்டில் 70 கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஜல்லிக்கட்டுக்காக பிறப்பித்த அவசர சட்டத்துக்கு மாற்றாக, தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமையன்று நிரந்தர சட்ட மசோதா கொண்டு வந்தார். அது, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு முடிவு
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, நேற்று முன்தினம் ஆஜராகி, ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக சட்டசபை சட்டம் இயற்றி விட்டதை கருத்தில் கொண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு ஜனவரி 6-ந் தேதி பிறப்பித்த அறிவிக்கையை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என கூறினார்.
அதற்கு நீதிபதிகள், இதுபற்றி முறையாக மனு தாக்கல் செய்கிறபோது, சம்பந்தப்பட்ட நீதிபதிகளின் அமர்வு முடிவு எடுக்கும் என குறிப்பிட்டனர்.
முறையீடு
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி, அரியமா சுந்தரம், ஆனந்த் குரோவர் ஆகியோர் நேற்று ஆஜராகி, தாங்கள் இந்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள் மற்றும் க்யூபா, பியாபோ போன்ற மிருகநல அமைப்புகளின் சார்பில் ஆஜராக முன்வந்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் தங்கள் முறையீட்டில், தமிழக அரசு தற்போது ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டின் 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு எதிரானது என்று தெரிவித்தனர்.
30-ந் தேதி விசாரணை
அப்போது குறுக்கிட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா, ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அரசு முறையீடு செய்துள்ளது. அம்மனு 30-ந் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
அதற்கு அபிஷேக் சிங்வி, மத்திய அரசின் அறிவிக்கையை திரும்பப் பெறுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆகவே எங்களுக்கு உரிய மனுக்களை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினர். மேலும், அனேகமாக 30-ந் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தனர்.