விஜயாப்புரா,
மராட்டியம், ஆந்திராவை ஒட்டியுள்ள வடகர்நாடக மாவட்டங்களில் சமீபகாலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி தாலுகா காடிகேஸ்வரா கிராமம் மற்றும் விஜயாப்புரா மாவட்டத்தில் உள்ள பபலேஸ்வராவில் தான் அடிக்கடி நிலநடுக்கம் உண்டாகி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காடிகேஸ்வரா கிராம மக்கள் தங்களது கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை விஜயாப்புரா மாவட்டத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது விஜயாப்புராவில் டவுன் மற்றும் விஜயாப்புரா தாலுகாவில் உள்ள அலியாபாத், நிங்கனா, பரதகி, கூகடி ஆகிய கிராமங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்த நில நடுக்கத்தின் போது வீடுகள் குலுங்கின. பாத்திரங்கள் உருண்டோடின. இதனால் மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த கிராமங்களுக்கு நிலநடுக்கத்தை அளவீடும் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது ரிக்டர் அளவில் 2.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இது லேசான நிலநடுக்கம் தான் என்றும், பீதி அடைய வேண்டாம் என்றும் கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். ஆனாலும் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.