புதுடெல்லி,
சீனாவில் தோன்றி உலக நாடுகளையெல்லாம் உலுக்கி எடுத்துவரும் கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவை யும் விட்டு வைக்கவில்லை.
இந்த தொற்றுநோய் சாமானிய மனிதர்களை மட்டுமல்ல, மக்கள் பணியில் ஈடுபட்டுவரும் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களில் தொடங்கி மத்திய, மாநில மந்திரிகள், கவர்னர்கள், முதல்-மந்திரிகள் என அரசியல் பிரபலங்களையும் பாதித்து வருகிறது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, சிகிச்சைக்கு பின்னர் வெற்றிகரமாக மீண்டு வந்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநில மந்திரியும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சேத்தன் சவுகானும் (வயது 73) கொரோனா தொற்றுக்கு ஆளானார். இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கருடன் தொடக்க வீரராக டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கி விளையாடி பெயரும், புகழும் பெற்றவர் ஆவார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை அவர் அரசியலில் தொடங்கினார். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து, அம்ரோஹா தொகுதியில் இருந்து இருமுறை (1991 மற்றும் 1998) நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணி ஆற்றினார்.
கடந்த 2017-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் நகாவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான மந்திரிசபையில் இடம்பிடித்தார். இவர், படைவீரர் நலன், சிவில் பாதுகாப்பு, ஊர்க்காவல் துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார்.
கடந்த மாதம் 12-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சேத்தன் சவுகான், லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி முதுநிலை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளாலும் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை கடந்த வெள்ளிக்கிழமை இரவு மிகவும் மோசம் அடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் டெல்லியை அடுத்த குருகிராமில் உள்ள மேதாந்தா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல உறுப்புகளும் செயலிழந்தன. இருப்பினும் அவருக்கு வென்டிலேட்டர் வைக்கப்பட்டு, உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன.
என்றாலும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.30 மணிக்கு சேத்தன் சவுகானின் இதயம் செயலிழந்தது. இதனால் அவர் மரணம் அடைந்தார்.
இவர், உத்தரபிரதேசத்தில் கொரோனாவுக்கு பலியான 2-வது மந்திரி ஆவார்.
அந்த மாநிலத்தில் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல்ராணி வருண் என்ற பெண் மந்திரி கடந்த 2-ந் தேதி மரணம் அடைந்தார். இந்த நிலையில் அங்கு சேத்தன் சவுகானும் மரணம் அடைந்து இருப்பது, மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேத்தன் சவுகான் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், சேத்தன் சவுகான் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரராகவும், பின்னர் விடா முயற்சியுள்ள அரசியல் தலைவராகவும் தன்னை வளர்த்துக்கொண்டார். அவர் பொது சேவைக்கு பயனுள்ள பங்களிப்புகளை வழங்கி உள்ளார். உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியை பலப்படுத்தினார். அவரது மறைவால் வேதனை அடைந்து உள்ளேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது இரங் கலை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறி உள்ளார்.
சேத்தன் சவுகான், உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் 1947-ம் ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி பிறந்தவர்.
1969-1978 இடையே 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,084 ரன்கள் குவித்து உள்ளார். 7 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடி உள்ளார். மராட்டிய மாநிலத்துக்காகவும், டெல்லிக்காகவும் ரஞ்சி போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இவருக்கு 1981-ம் ஆண்டு, விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்பட்டது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் விளங்கிய இவருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய பயணம் ஒன்றில் அணி மேலாளராகவும் இருந்த அனுபவம் உண்டு.
சேத்தன் சவுகான் மனைவியின் பெயர் அனிதா சவுகான். இந்த தம்பதியருக்கு வினாயக் என்ற மகன் உள்ளார்.