தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலி

மேற்கு வங்காளத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலியானார். அவரது மறைவுக்கு மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மேற்கு வங்காளமும் ஒன்று ஆகும். அங்கு 1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,400-க்கும் அதிகமான பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.

அங்கு 2 மாதங்களுக்கு முன் பால்டா தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னாள் போக்குவரத்து மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொழிற்சங்க தலைவருமான சியாமல் சக்கரவர்த்தியும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ. கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். அவரது பெயர் சமரேஷ் தாஸ் (வயது 76).

இவர் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் ஏக்ரா தொகுதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். இவருக்கு நோய்த் தொற்று அறிகுறி இருந்ததால், பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதேபோல் அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமரேஷ் தாசை பன்ஸ்குராவில் உள்ள பரமா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து கொல்கத்தாவில் உள்ள பெலியகடா ஐடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால், சால்ட் லேக் பகுதியில் உள்ள அம்ரி ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி சமரேஷ் தாஸ் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார்.

சமரேஷ் தாஸ் எம்.எல்.ஏ.யின் மறைவை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். சமரேஷ் தாசின் மறைவால் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு