புதுடெல்லி,
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி மூலமாக ரூ.13,400 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஷி ஆகியோர் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மெகுல் சோக்ஷி ஜூலை மாதம் கார்பியன் தேசமான ஆன்டிகுவாவிற்கு சென்று, உள்ளூர் பாஸ்போர்ட்டை பெற்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்நாட்டு அதிகாரிகளை நாடிய சிபிஐ, மெகுல் சோக்ஷிக்கு எதிராக இன்டர்போல் வெளியிட்ட நோட்டீஸை குறிப்பிட்டு, அவர் எங்கிருக்கிறார், அவர்களுடைய நகர்வு என்னவாக இருக்கிறது என்பது தொடர்பான தகவலை அளியுங்கள் என கேட்டது.
ஆன்டிகுவா நாட்டின் முதலீடு செய்யும் போது கிடைக்கும் சலுகையின் மூலம் விசாவை பெற்றுள்ளார் மெகுல் சோக்ஷி.
இப்போது இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். சுஷ்மா சுவராஜ் ஐ.நா. கூட்டத்துக்கு இடையே ஆன்டிகுவா வெளியுறவு மந்திரி செட் கிரீனியை சந்தித்து பேசினார். அப்போது ஆன்டிகுவா மந்திரி கிரீனி, மெகுல் சோக்ஷியை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தனது நாட்டு அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என பிரதமர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.