ஸ்ரீநகர்,
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சிறப்பு அதிகாரியாக புலனாய்வுத்துறையின் முன்னாள் இயக்குனர் தினேஷ்வர் சர்மாவை மத்திய அரசு நியமித்து இருக்கிறது. அவருக்கு மத்திய மந்திரிக்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. அவர் காஷ்மீர் மாநிலத்தில் அனைத்து தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். காஷ்மீர் மக்களின், குறிப்பாக இளைஞர்களின் நியாயமான அபிலாஷைகளை அறிந்துகொள்வதற்கும் முயற்சிப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் காஷ்மீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி தற்போது, பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ள அதிகாரி தினேஷ்வர் சர்மா பேசுகையில் காஷ்மீரில் தன்னுடைய திட்டமானது வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவது என்பதே, மாநிலத்தில் விரைவில் அமைதியை திரும்ப செய்ய ரிச்சா ஓட்டுநர் உள்பட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என குறிப்பிட்டார்.
காஷ்மீரில் அமைதி திரும்ப மத்திய அரசு நியமனம் செய்து உள்ள பிரதிநிதியிடம் யார் வேண்டுமென்றாலும் பேசலாம் என அம்மாநில மந்திரி லால் சிங் கூறிஉள்ளார். ஜனநாயக முறையில் மத்திய, மாநில அரசுக்கள் அமைதியான நிலை திரும்ப முயற்சியை எடுத்து வருகிறது, மாநில மக்களின் வளர்ச்சிக்கும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. அமைதி திரும்ப அனைத்து தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு அதிகாரியை நியமனம் செய்து உள்ளது. நாம் ஜனநாயகத்தை கொண்டு உள்ளோம், சர்வாதிகாரத்தை கொண்டிருக்கவில்லை. அவர் யாரை வேண்டுமென்றாலும் சந்தித்து பேசலாம், இந்திய அரசியலமைப்புக்கு மாறாக எதுவும் நடக்க கூடாது.
தேசத்திற்கு எதிராக செயல்படும் தேச விரோத சக்திகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என குறிப்பிட்டார் ஜம்மு காஷ்மீர் வனத்துறை மந்திரி லால் சிங்.
யார் வேண்டுமென்றாலும் தங்களுடைய பிரச்சனை தொடர்பாக தினேஷ்வர் சர்மாவிடம் பேசலாம் எனவும் குறிப்பிட்டார்.