ஐதராபாத்,
ஆந்திராவில் ஓடும் 2 பெரிய நதிகளான கோதாவரியையும், கிருஷ்ணாவையும் இணைக்கவேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்தது. 1950களில் மத்திய நீர்பாசனத்துறை மந்திரியாக பதவி வகித்த கே.எல். ராவ் இதற்கான வரைவு திட்டத்தை தீட்டினார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த திட்டம் மறுசீரமைக்கப்பட்டது. 2015-ம் ஆண்டு இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இரு நதிகளையும் இணைக்க 174 கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டு இருக்கிறது.
கோதாவரி தண்ணீர் போலாவரம் கால்வாய் வழியாக விஜயவாடா அருகே உள்ள பிரகாசம் அணைக்கட்டில் கிருஷ்ணா நதிநீருடன் சேருகிறது. கோதாவரிகிருஷ்ணா நதிகள் இணைப்பு திட்டத்தை ஆந்திர அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி சாதனை படைத்து. கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ந்தேதிதான் தொடங்கப்பட்டது. குறுகிய காலத்தில் அதாவது அவ்வருட செப்டம்பர் மாதத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டு 2 பெரிய நதிகளும் இணைக்கப்பட்டன. இந்தியாவில் மிகப்பெரிய 2 நதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டது இருப்பது இதுவே முதல் முறையாகும்.
ஆந்திராவின் கடப்பா, கர்னூல், அனந்தபூர், சித்தூர் ஆகிய மாவட்டங்கள் மழையை நம்பியே உள்ளன. இந்த மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நதி நீர் இணைப்பு திட்டம் நாட்டிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது. கோதாவரி நதியிலிருந்து ஆண்டு தோறும் ஏராளமான நீர் கடலில் கலந்து வீணாவது தடுக்கப்பட்டது. பட்டிசீமா அணைக்கட்டு வழியாக ராயலசீமா மாவட்டங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
வறட்சியைப் போக்க ஒரு ஆண்டுக்குள் ஆந்திர அரசு செயல்படுத்திய கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு திட்டம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாட்டில் குறிப்பிட்ட நாட்களில் விரைவாக முடிக்கப்பட்ட முதல் நீர்ப்பாசன திட்டம், எந்தஒரு செலவு மாற்றங்களும் இன்றி முடிக்கப்பட்டு உள்ளது என குறிப்பிடப்பட்டு உள்ளது. லிம்கா புத்தகத்தில் கோதாவரி - கிருஷ்ணா இணைப்பு திட்டம் இடம்பெற்று உள்ளது பெருமையாக உள்ளது என சந்திரபாபு நாயுடு கூறிஉள்ளார்.