புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் கோட்டையாக இருந்த கோரக்பூர் தொகுதியிலும், பூல்பூர் தொகுதியிலும் நடந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதாவை வீழ்த்தி சமாஜ்வாடி வெற்றியை தனதாக்கியது. இதேபோன்று பீகாரின் அராரியா எம்.பி. தொகுதியை ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தக்க வைத்தது. அதன் வேட்பாளர் சர்பராஸ் ஆலம், தனக்கு அடுத்தபடியாக வந்த பாரதீய ஜனதா வேட்பாளர் பிரதீப் குமார் சிங்கை 60 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்றார். மூன்று தொகுதியிலும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான முகமது தஸ்லிமுதீன் மரணம் அடைந்ததால் அவரது அராரியா தொகுதி காலியானது.
இந்நிலையில் பாரதீய ஜனதா தோற்ற அராரியா விரைவில் பயங்கரவாதிகள் மையமாகும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியது சர்ச்சையாகி உள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், அராரியா தொகுதி எல்லைப்பகுதியை ஒட்டிமட்டும் இல்லை, நேபாளம் மற்றும் வங்காளதேசத்துக்கு அருகேயும் இருக்கிறது. அந்த நாட்டை சேர்ந்தவர்கள் எல்லாம் மிகவும் கொடிய சிந்தாத்தங்களை கொண்டவர்கள். இது பீகார் மாநிலத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்தாகும். விரைவில் அராரியா தொகுதி பயங்கரவாதிகளின் கூடாரமாகவும், சங்கமிக்கும் இடமாகவும் மாறும் என கூறினார். கிரிராஜ் சிங் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது என்பது புதியது கிடையாது.
கிரிராஜ் சிங் பேச்சுக்கு பதிலடி கொடுத்த ராப்ரி தேவி இந்தியாவில் அனைத்து பயங்கரவாதிகளும் பாரதீய ஜனதா அலுவலகத்தில்தான் அமர்ந்திருக்கிறார்கள். பீகார் மற்றும் உத்தரபிரதேச மக்கள் சரியான பதிலை கொடுத்து உள்ளார்கள். அராரியா மக்களிடம் மன்னிப்பு கோரவேண்டும், இல்லையென்றால் 2019 தேர்தலிலும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள், என கூறிஉள்ளார்.