புதுடெல்லி,
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் காலியாக இருக்கும் 21 சட்டசபை தொகுதிகளில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் தவிர மற்ற 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துமாறு தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செந்தில் பாலாஜி ஆகியோர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, வக்கீல்கள் பி.வில்சன், இந்திரா ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணை தொடங்கியதும் தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல் அமித் ஷர்மா, இந்த அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளிலும் நியாயமான கால அவகாசத்தில் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க. தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி வாதாடுகையில், தேர்தல் கமிஷன் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தற்போது ஒப்புக் கொண்டது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி. தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்துக்கு குறைந்த கால அவகாசமே உள்ளது. எனவே, இந்த 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்றத்துக்கு மற்ற 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23, 29, மே 6, 12, 19 ஆகிய ஏதேனும் ஒரு தேதியில் நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், நியாயமான கால அவகாசத்தில் இந்த 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்துவதாக தேர்தல் கமிஷன் ஒப்புக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் இன்ன தேதியில் நடத்த வேண்டும் என்று நாங்கள் தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட முடியாது என்று கூறி அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். அத்துடன் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
3 தொகுதிகளுக்கும் உரிய நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் தெரிவித்து இருப்பதால், அந்த தொகுதிகளுக்கு உடனடியாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை.