தேசிய செய்திகள்

விதிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா? - அதிகாரிகள் கண்காணிக்க, பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவு

அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா நோய்த் தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் 2020-2021-ம் கல்வியாண்டுக்கான அனைத்து வகுப்பு பாடங்களும் ஆன்லைனிலும், கல்வி தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும்போது சில விதிமுறைகள், வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று விரிவான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி அரசு வெளியிட்டது.

இந்த நிலையில் சமீப நாட்களாக ஆன்லைன் வகுப்புகள் குறித்து சில புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் வகுப்புகள் விதிமுறைகள், வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள், பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புக்கு பின்பற்றப்படும் கால அட்டவணை விவரங்களை, அந்த வகுப்பு எடுக்கும் ஆசிரியரின் பெயருடன் வகுப்பு வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.

எந்த ஒரு ஆன்லைன் வகுப்புகளிலும் குழந்தைகளிடம் கட்டாயம், வேண்டும், அவசியம், வருகை கணக்கிடப்படும், மதிப்பெண்கள் மதிப்பீடு இதன் அடிப்படையில்தான் இருக்கும் என்று சொல்லி நிர்ப்பந்திக்கக் கூடாது போன்றவை அடங்கிய அரசின் விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மின்னஞ்சல் வழியாகவோ, தபால் வழியாகவோ ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் தெரியப்படுத்த வேண்டும். இதனை முதன்மை கல்வி அதிகாரிகள் கண்காணிப்பதோடு, ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகளின் பட்டியலை தயார்படுத்த வேண்டும்.

இதுதவிர முதன்மை கல்வி அதிகாரிகள், ஒவ்வொரு பள்ளியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியரின் தொடர்பு விவரங்கள் அறிவிப்பு பலகையிலோ, பள்ளியின் இணையதளத்திலோ, ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியிலோ தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல், ஆன்லைன் வகுப்புகள் குறித்த புகார்கள், குறைகளை தெரிவிக்க பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்ட grievances-redressaltnpta@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை விளம்பரப்படுத்த வேண்டும். அவ்வாறு வரும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மனஅழுத்தம் இருக்கும் பட்சத்தில் பள்ளிக்கல்வித் துறையால் அமல்படுத்தப்பட்டு இருக்கும் 14417 என்ற உதவி எண்ணை பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்புகொண்டு ஆலோசனை பெற அறிவுறுத்த வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் ஒவ்வொரு பள்ளிகளும் 2 வாரங்களுக்கு ஒருமுறை அவர்கள் நடத்திய பாடங்கள் குறித்த விவரங்களை முதன்மை கல்வி அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு