மும்பை,
இந்தி திரைப்பட நடிகர் அர்ஜூன் ராம்பால். இவரது சகோதரி கோமல். அவரை அமித் கில் என்பவர் திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், கில் தன்னை வீட்டிற்கு வரவழைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ஆபாச புகைப்படங்களை எடுத்து அதனை சமூக வலை தளங்களில் பரப்பி அவதூறு செய்து விடுவேன் என மிரட்டினார் என பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, விமான பணிப்பெண்ணான அந்நபர் மும்பையின் வெர்சோவா பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கும், கில்லுக்கும் பல வருட அறிமுகம் உள்ளது.
இந்த பெண்ணின் தோழி, கில்லிடம் ரூ.80 லட்சம் வரை பணம் கொடுத்தேன். அதற்கு வட்டியுடன் அவர் அதிக பணத்தினை திருப்பி கொடுத்துள்ளார். அதனால் நீயும் அவரிடம் பணம் கொடு என பெண்ணிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அமித் கில் மற்றும் பெண்ணின் தாயாருக்கும் இடையே பணம் முதலீடு செய்வது பற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த பெண் கில்லிடம் ரூ.18 லட்சம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கில்லிடம் தனது பணத்தினை திருப்பி தரும்படி அந்த பெண் கேட்டுள்ளார். ஆனால் கிடைத்த செக், பவுன்ஸ் ஆகியுள்ளது. அதன்பின் ரூ.12 லட்சம் பணம் கணக்கில் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால் மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தினை வட்டியுடன் தரும்படி கேட்டுள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன் கில்லை அந்த பெண் தொடர்பு கொண்டுள்ளார். தனது இல்லத்திற்கு வரும்படி கில் கூறிய நிலையில், சான்டாகுரூசில் உள்ள 15வது சாலை பகுதியில் அமைந்த வீட்டிற்கு அவர் சென்றுள்ளார்.
அவருக்கு கில் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்துள்ளார். அதன்பின் அந்த பெண் மயங்கியுள்ளார். அவரை கில் பாலியல் பலாத்காரம் செய்து மற்றும் ஆபாச புகைப்படங்களையும் எடுத்துள்ளார் என அந்த பெண் குற்றச்சாட்டு கூறியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கில் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.