புதுடெல்லி,
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் சிறப்புப் படை வீரர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகம் புதிதாக ஏற்படுத்திய ஆயுதப்படைகள் சிறப்பு நடவடிக்கை பிரிவின் கீழ் இந்திய ராணுவத்தின் பாரா ராணுவப் பிரிவு, இந்திய கடற்படையின் கமாண்டோ பிரிவு மற்றும் இந்திய விமானப் படையின் கருடா பாதுகாப்பு பிரிவு ஆகிய சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இணைந்து செயல்படுவதன் மூலமாக அவசர காலங்களில் முப்படைகளும் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பயிற்சியாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு படையின் முதல் தலைவராக மேஜர் ஜெனரல் அசோக் திங்க்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த சிறப்பு படை உருவாக்கப்பட்டதில் இருந்து அவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், இருப்பினும் வீரர்களை தேர்வு, ஆயுதங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட சில குறைகள் இருப்பதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.