மும்பை,
தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மாநில மந்திரி நவாப் மாலிக் கடந்த புதன்கிழமை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவரை அமலாக்கத்துறையினர் அடுத்த மாதம் 3-ந் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று அவர் திடீரென சிகிச்சைக்காக மும்பை ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த தகவலை நவாப் மாலிக்கின் அலுவலகமும் டுவிட்டரில் வெளியிட்டது.
இதேபோல அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் நவாப் மாலிக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்தார். இதுகுறித்து அந்த அதிகாரி கூறுகையில், " அமலாக்கத்துறை காவலில் இருந்த நவாப் மாலிக் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து அதிகாரி ஒருவரிடம் கூறினார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். " என்றார். எனினும் நவாப் மாலிக்கிற்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து எதுவும் தெரியவரவில்லை.