புதுடெல்லி,
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பண மோசடியில் ஈடுபடுவதாகவும் இதன் காரணமாகவே பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அண்மையில் டெல்லி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா தெரிவித்தார். ஆனால், கபில் மிஸ்ராவின் இந்த கருத்தை அபத்தமானது என்று கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி, பொய்களை பரப்புவதற்கு பாரதீய ஜனதா மிஸ்ராவை பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் டெல்லி அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ள கபில் மிஸ்ரா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கெஜ்ரிவால் ஏன் கடுமையாக எதிர்த்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஏன் கெஜ்ரிவால் பயணம் மேற்கொண்டார். ஏனெனில் அவருக்கு வேண்டப்பட்டவர் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் அமலாக்கத்துறை சோதனைக்குள்ளானது. ஆம் ஆத்மிக்கு நன்கொடை அளிப்பவர்களில் போலி நிறுவனங்களின் பட்டியலும் உள்ளது. வாட் வாரியை செலுத்தவில்லை என்று நோட்டீஸ் அனுப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து எப்படி ஆம் ஆத்மி நன்கொடை பெற்றுக்கொண்டது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் முகேஷ் குமார், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சிக்கு ரூ.2 கோடி நன்கொடை அளித்ததாக தெரிவித்துள்ளார். ஆனால், 2013 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி பொறுப்பேற்பதற்கு 10 நாட்கள் முன்பு டெல்லி அரசு, முகேஷ் குமாரின் நிறுவனம் வாட் வரியை செலுத்தவில்லை என கூறி, நோட்டீஸ் அனுப்பியது. அதன்பிறகு ஆம் ஆத்மிக்கு முகேஷ் குமார், 2 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். முகேஷ் குமாரின் நிறுவனத்திற்கு எதிராக ஆம் ஆத்மி அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
கபில் மிஸ்ராவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஆம் ஆத்மி கட்சியைச்சேர்ந்த சஞ்செய் சிங், ஆம் ஆத்மியின் கட்சியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு நாளும் ஒரு சதித்திட்டத்தில் ஈடுபடுகிறது. ஆம் ஆத்மி கட்சி பெற்ற ஒவ்வொரு நன்கொடையும் பொது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. விதிகளின்படியே பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியிடம் குறைபாடுகளை கண்டறிய பாரதீய ஜனதா முயற்சிக்கிறது. ஆனால், பாஜகவால் எதையும் கண்டறிய முடியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.