கவுகாத்தி,
அசாம் மாநிலத்தின் ஹோஜாய் மாவட்டம் உதலி நகரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நோயாளிகளின் உறவினர்கள் அதிரடியாக நுழைந்து அங்கு பணியில் இருந்த டாக்டர் சீயஜ்குமார் சேனாதிபதி மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களை சரமாரியாக தாக்கினர்.
இதில் டாக்டர் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. டாக்டர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ கழகம், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யும் வரை டாக்டர்கள் யாரும் பணியில் ஈடுபட மாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளது.
இதற்கிடையே டாக்டரை தாக்கியதாக 24 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.