தேர்தல் 2026

சட்டசபை தேர்தல்: 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவு: களைகட்டும் தேர்தல் பிரசாரம்

கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று அவை பரிசீலனை செய்யப்படுகின்றன.

புதுச்சேரி,

கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகிற 9-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக கடந்த 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதைத்தொடர்ந்து இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிரமாக வேட்பாளர்களை அறிவித்தன. அதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தொடர்ந்து தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.

புதுச்சேரி

புதுச்சேரியில் 30 உறுப்பினர் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 16-ந் தேதி தொடங்கியது. முதல் 2 நாட்களில் யாரும் தாக்கல் செய்யவில்லை. 18-ந் தேதி அமாவாசை என்பதால் அன்றைய தினத்தில் கூட்டணி, தொகுதி பங்கீடு முடிவு ஏற்படாமலேயே பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் என 12 பேர் மனு தாக்கல் செய்தனர். இறுதி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் அதிக அளவில் நடந்தது. குறிப்பாக காங்கிரஸ், தி.மு.க. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாததால் இரு தரப்பை சேர்ந்தவர்கள் 30 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இறுதி நிலவரப்படி புதுச்சேரியில் மொத்தம் 444 பேர் 514 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளம்

கேரள மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஒரு அணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு அணி, பா.ஜ.க. சார்பில் மற்றொரு அணி என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த அணிகள் மற்றும் சுயேச்சைகள் என மாநிலத்தில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் 2,039 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷன் பரவூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே முதல்-மந்திரி பினராயி விஜயன் தர்மடம் தொகுதியிலும், மாநில பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

அசாம்

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கும் கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கல் மும்முரமாக நடந்தது. மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மற்றொரு அணி ஆகியவை பிரதானமாக களத்தில் இருக்க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனியாகவும் களமிறங்கி உள்ளன.

அங்கும் கடைசி நாளான நேற்று முக்கிய தலைவர்கள், மந்திரிகள் உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். மொத்தம் 818 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இந்த 3 மாநிலங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளநிலையில், 3 மாநிலங்களிலும் வருகிற நாட்களில் தீவிர பிரசாரம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.