புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை, அதுபோல் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இதனையடுத்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் தூதரகத்தின் அருகில் நடந்த குண்டுவெடிப்பு குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காபி ஆஸ்கெனாசியிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் இஸ்ரேல் தூதரகத்திற்கும் அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என இஸ்ரேல் தூதரிடம் தான் உறுதியளித்தாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.