பெங்களூரு,
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதையும் மீறி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.