புதுடெல்லி,
அனைத்து விதமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிக்கும் சரக்கு - சேவை வரி (ஜி.எஸ்.டி) ஜூலை 1-ந்தேதி அமல்படுத்தப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த மாதம் 19-ந்தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 1,200 பொருட்கள் மற்றும் 500 சேவைகளுக்கு 5, 12, 18 மற்றும் 28 என நான்கு விதமான ஜி.எஸ்.டி. வரி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 5 சதவீதம் வரி நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது ஜவுளி, பிஸ்கட், காலணி, பீடி போன்ற பொருட்கள் மீது தங்கம், முத்து போன்ற விலை மதிப்புமிக்க உலோகங்களை மீதும் ஜி.எஸ்.டி. வரி விகிதம் நிர்ணயிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 15-வது கூட்டம் டெல்லியில் இன்று காலை தொடங்கியது. மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் பேசும் போது
ஜிஎஸ்டி கூட்டத்தில் 43 பொருட்களின் வரியை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி மசோதா விரைவில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும். ஜிஎஸ்டி மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. கோதுமை, மைதா, கடலைமாவுக்கு வரி விதிக்க கூடாது. குடி நீர் கேன்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு அளிக்க வேண்டும். பனைவெல்லத்திற்கு 18 சதவிகித வரி விதிப்பு மிகவும் அதிகமாகும்.
கருப்பட்டி பனங்கற்கண்டுக்கு வரி குறைப்பு தேவை. கோவையில் தயாரிக்கும் வெட்கிரைண்டருக்கு வரி குறைக்க வேண்டும். பாக்கெட்டுகளில் விற்பனையாகும் அரிசி, கோதுமைக்கு வரி விதிக்க கூடாது. 28 சதவிகித வரி என்பது தமிழக திரைத்துறையை பாதிக்கும். மசாலா பொருட்களுக்கான 28 சதவிகித வரி சர்க்கரைக்கான 18 சதவிதித வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.