லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று மிக, மிக முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் பிரியங்கா, ராகுல் காந்தி ஆகியோர் பேரணியில் கலந்துகொண்டனர். ஆனால் அவர்கள் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடி நடந்தது. பிரியங்காவும், ராகுலும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு பஸ்சின் மீது நின்றபடி சென்றனர். பர்லிங்டன் என்ற இடத்தில் பேரணி சென்றபோது அவர்களது வாகனத்தின் கூரை மீது மின்கம்பி உரசியது.
மின்கம்பி இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கவனிக்கவில்லை. உரசிய பின்னரே அதிகாரிகள் சுதாரித்துக்கொண்டு உடனடியாக தலைவர்களை பஸ்சில் இருந்து இறங்கும்படி கூறினர். பின்னர் அவர்கள் கார் மூலம் அந்த பேரணியில் கலந்துகொண்டனர். இந்த சம்பவம் அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த சம்பவத்தால் பேரணி குறைக்கப்பட்டதுடன், திட்டமிடப்பட்டு இருந்த பிரியங்காவின் கன்னிப்பேச்சும் தள்ளிவைக்கப்பட்டது. பேரணியின் இடையே ராகுலும், பிரியங்காவும் லால்பாக் பகுதியில் புகழ்பெற்ற ஒரு டீக்கடையில் டீ குடித்தனர்.