திருமலை,
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் ஏழுமலையானை தரிசித்த பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இதுவரை பக்தர்களால் செலுத்தப்பட்ட ரூ.20 கோடியே 50 லட்சம் சில்லரை நாணயங்களை வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ள எந்த வங்கியும் முன்வரவில்லை. இதனால் தேவஸ்தான அதிகாரிகள் வங்கிகளில் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சில்லரை நாணயங்கள் தேக்கம் அடைந்தன.
இதையடுத்து திருமலை-திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மாரெட்டி வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் கலந்து கொண்ட வங்கி அதிகாரிகளில் ஒரு சிலர் மட்டும் சில்லரை நாணயங்களை டெபாசிட் செய்து கொள்ள முன்வந்தனர். அவர்கள் மூலம் தற்போது ரூ.5 கோடியே 15 லட்சம் சில்லரை நாணயங்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.15 கோடியே 35 லட்சம் சில்லரை நாணயங்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.