புதுடெல்லி,
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, என்னுடைய 65 ஆண்டுகால நண்பனை இழந்து தவிக்கிறேன் என்று வேதனையை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாஜ்பாய் மரணத்தினால் ஏற்பட்டுள்ள வருத்தத்தையும், துயரத்தையும் தெரிவிக்க என்னிடம் பேசுவதற்கு வார்த்தைகள் கிடையாது. என்னுடன் பணியாற்றிய மூத்தவர் என்பதை தவிர்த்து, உண்மையில் எனக்கு 65 ஆண்டுகள் நெருங்கிய நண்பர் ஆவார். ஆர்.எஸ்.எஸ். புரட்சியாளர்களாக இருந்து பா.ஜனதா கட்சியை தொடங்குவது வரையிலும், நெருக்கடிநிலை பிரகடன இருண்ட காலத்தின் போது போராடி ஜனதா கட்சியை உருவாக்கியது, 1980 பா.ஜனதா கட்சியின் தோற்றம் வரையில் அவருடன் பயணித்த நீணட காலத்தை நினைவுகொள்கிறேன்.
மத்தியில் காங்கிரஸ் அல்லாத நிலையான அரசாங்கத்தை ஏற்படுத்தியவராக நினைவில் இருப்பார். அவருடன் ஆறு ஆண்டுகளாக துணை பிரதமராக பணியாற்றும் பாக்கியம் எனக்கு இருந்தது. என்னுடைய மூத்தவரான அவர், எப்பொழுதும் ஊக்கப்படுத்தினார், எல்லா விதத்திலும் எனக்கு வழிகாட்டினார். அவரது நாகரீகமான தலைமைத்துவ குணங்கள், மெய்மறக்கசெய்யும் சொற்பொழிவுகள், அதிகமான தேசப்பற்று, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய கருணை, பாசம் மற்றும் கருத்தியல் வேறுபாடுகள் இருந்த போதிலும் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் குறிப்பிடத்தகுந்த குணங்கள் என்னுடைய பொது வாழ்க்கையில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. என்னுடைய அடல்ஜியை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.