தேசிய செய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்தலாமா? - ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலனை

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை காணொலி காட்சி மூலம் நடத்துவது குறித்து ராமஜென்ம பூமி அறக்கட்டளை பரிசீலித்து வருகிறது.

தினத்தந்தி

அயோத்தி,

அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை கவனிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, ராமஜென்ம பூமி திரத் ஷேத்ர டிரஸ்ட் என்ற அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்தது. ராமர் பிறந்த இடத்தில் இருந்த ராமர் சிலையும், இதர சிலைகளும் கடந்த மாதம் 25-ந் தேதி, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் முன்னிலையில் தற்காலிக கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜையை இம்மாதம் 30-ந் தேதி நடத்த துறவிகள் திட்டமிட்டு இருந்தனர். அந்த தேதியில் நடத்துவதாக அறக்கட்டளை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அந்த தேதியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன.

பூமி பூஜையில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், தற்போது நாடுதழுவிய ஊரடங்கு அமலில் இருப்பதால், 30-ந் தேதி பூமி பூஜையை பிரமாண்டமாக நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.

அதனால், பூமி பூஜை தள்ளி வைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், அது இந்துக்களுக்கு உகந்த நாள் என்பதால், அதே தேதியில் எளிமையாக நடத்த அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

எனவே, காணொலி காட்சி மூலம் பூமி பூஜையை நடத்துவது பற்றியும், நிலைமை சீரடைந்த பிறகு பிரமாண்டமாக விழா நடத்துவது பற்றியும் அறக்கட்டளை நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத்ராய் தெரிவித்தார். பிரதமர் மோடியும் காணொலி காட்சி மூலம் பங்கேற்பார் என்று தெரிகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்