தேசிய செய்திகள்

‘பாபா தியாகம் செய்ய சொன்னார், ஆண்மை நீக்கம் என தெரியாது’ குர்மீத் சிங்கின் முன்னாள் சீடர் பேட்டி

‘பாபா தியாகம் செய்ய சொன்னார், ஆனால் விதை நீக்கம் என தெரியாது’ என சாமியார் குர்மீத் சிங்கின் முன்னாள் சீடர் ஹன்ஸ்ராஜ் கூறிஉள்ளார்.

தினத்தந்தி

சண்டிகார்,

இருபெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் சாமியார் குர்மீத் சிங்கிற்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் ஜெயில் தண்டனை விதித்து சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே சாமியாருக்கு எதிராக ஆசிரமங்களில் நடந்த அவலத்தை வெளிக்கொண்டு வந்த செய்தியாளர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையும் இறுதி கட்டத்தை அடைந்து உள்ளது. இதுபோன்று ஆண் சீடர்கள் 400 பேரின் விதை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக ஹன்ஸ்ராஜ் கடந்த 2012 ஜூலையில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பின்னர் கடந்த 2014-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

சாமியார் குர்மீத் சிங்கிற்கு எதிரான ஆண்மை நீக்கம் வழக்கில் குர்தாஸ் சிங் என்பவர் முக்கிய சாட்சியாக உள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று சாமியார் குர்மீத் சிங் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹன்ஸ்ராஜ் நடந்த சம்பவங்களை விளக்கினார். தன்னுடைய பெற்றோர் சாமியார் குர்மீத் சிங்கை பின்தொடர்பவர்கள், அதனால் தன்னை அங்கு சேர்த்ததாக குறிப்பிட்ட ஹன்ஸ்ராஜ் பாபா (குர்மீத் ராம் ரகீம் சிங்) என்னை நெருங்க விருப்பம் உடையவர்கள் எதையாவது எனக்காக தியாகம் செய்ய வேண்டும் என எப்போதும் கூறுவார், ஆனால் எனக்கு தெரியாது அது ஆண்மை நீக்கம் என்று. என குறிப்பிட்டார்.

ஆசிரமத்தில் சேர்ந்த போது என்னுடைய பதின்மை வயதில் இசையின் மீது மிகவும் நாட்டம் இருந்தது. அதனால் தேராவில் இசை தொடர்பான துறையில் சேர்ந்தேன். அப்போது இசை உபகரணங்களை பயன்படுத்துவது மற்றும் பாடுவதை கற்றுக் கொண்டேன். 1999-ல் தேராவில் குதிரைகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்டது எங்களுக்கு தெரியவந்தது, அந்த குதிரை மூன்று மாதங்களில் உயிரிழந்துவிட்டது, அப்போதுதான் அதனுடைய வீரியம் எங்களுக்கு தெரியவந்தது. பின்னர் அந்த சோதனையானது மனிதர்களிடம் பிரயோகப்படுத்தப்பட்டது.

தேராவின் மூத்த அதிகாரிகள் இந்த ஆப்ரேஷனுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் என்னையும், என்னுடன் இருந்த சீடர்கள் 18-20 பேரையும் (மைனர்கள் உள்பட) ஆண்மை நீக்க ஆப்ரேஷன் செய்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. அப்போது எங்களிடம் சிறிய உடல் பரிசோதனையே என தெரிவிக்கப்பட்டது. இப்போது வரையில் நான் என்னுடைய இயற்கையான வாழ்க்கையை வாழவில்லை என்றார் ஹன்ஸ்ராஜ் .

எனக்கு ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட போது வயது 20. 2002 அக்டோபர் மாதம் இரவு எங்களுக்கு ஆண்மை நீக்கம் செய்வதற்கான ஆப்ரேஷன் நடந்தது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் உள்ள தேரா மருத்துவமனையில்தான் இந்த ஆப்ரேஷன் நடந்தது. இதனையடுத்து எனக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது உடனடியாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன். பின்னரும் தேராவின் ஆதரவாளர்கள் என்னை அங்கு இழுத்து செல்ல முயற்சி செய்தார்கள், ஆனால் நான் திரும்பவில்லை என கூறிஉள்ளார் ஹன்ஸ்ராஜ்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை