புதுடெல்லி,
ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணுக்கு நடு வானிலேயே குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த குழந்தைக்கு ஆயுள் முழுதும் இலவச பயண சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- சவூதி அரேபியாவில் இருந்து கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் 162 பயணிகளுடன் நேற்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த விமனாம் நடு வானில் பறந்து வந்து கொண்டிருந்த போது, பெண் ஒருவருக்கு பிரவச வலி ஏற்பட்டது.
இதையடுத்து, மருத்துவ அவசரம் என கோரி விமானத்தை உடனடியாக மும்பைக்கு விமானத்தை விமானி திருப்பினார். விமானம் அரேபிய கடல் பகுதியில் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அந்தப்பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். விமானம், மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பெண்ணும் அவரது குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு குழந்தையும் தாயும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து 90 நிமிட தாமதத்திற்கு பிறகு விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொச்சிக்கு நேற்று பிற்பகல் 12.45 மணியளவில் சென்றடைந்தது. இந்த சம்பவம் பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜெட் ஏர்வேஸ், தங்கள் நிறுவன விமானத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது இதுதான் முதல் தடைவை எனவும், விமானத்தில் பிறந்த குழந்தை தன் ஆயுள் முழுவதும் இலவச பயணத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானத்தில் மேற்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.