சண்டிகர்,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆடவர் ஃபிரீஸ்டைல் மல்யுத்த போட்டியின் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா மற்றும் கஜகஸ்தானின் தவுலத் நியாஜ்பெகோவ் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இன்று விளையாடினர்.
இதில், 8-0 என்ற புள்ளி கணக்கில் பூனியா வெற்றி பெற்றுள்ளார். இதனால் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது. வெற்றி பெற்ற பஜ்ரங் பூனியாவுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பஜ்ரங் பூனியாவை பாராட்டி அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வெற்றி பெற்ற பூனியாவிற்கு பாராட்டுகள். அவர் பதக்கங்களை மட்டும் வெல்லவில்லை. ஒட்டு மொத்த நாட்டின் இதயங்களை வென்றுள்ளார்.
அவருக்கு ரூ.2.5 கோடி பணமும், அரசு வேலையும் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். ஒலிம்பிக்கில் அரியானா சார்பில் பங்கேற்ற வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என கட்டார் நேற்று அறிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பினை அவர் இன்று வெளியிட்டு உள்ளார்.