புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகளால் பள்ளிகள், திரையரங்குகள், மதவழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டன. ஊரடங்கால் பல்வேறு மதம் சார்ந்த பண்டிகை கொண்டாட்டங்களும் முடங்கின.
இந்த நிலையில், ஆண்டு தொடக்கத்தில் சரிவை நோக்கி சென்ற தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சமடைந்து வருகிறது. இந்த ஆண்டில் முதல்முறையாக ஒருநாளில் 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இவற்றில், மராட்டியத்தில் மீண்டும் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. மராட்டியத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26.4 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது.
அதிகரித்து வரும் தொற்றுகளால் மராட்டியத்தில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதேபோன்று பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. வருகிற 29ந்தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மராட்டியத்தின் நாக்பூர் நகரில் அதற்கு நகராட்சி நிர்வாகம் தடை விதித்து உள்ளது.
இதுபற்றி நாக்பூர் நகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் கூறும்பொழுது, நாக்பூரில் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகள் உள்ளிட்டவை வருகிற 29ந்தேதி முழுவதும் அடைக்கப்படும்.
அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளான காய்கறி கடைகள், சிக்கன் உள்ளிட்ட அசைவ கடைகள் மதியம் 1 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்கள் ஒன்றாக கூடுவதற்கோ அல்லது கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கோ தடை விதிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்து உள்ளார்.
அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மும்பையில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக ஜார்க்கண்டிலும் அனைத்து பண்டிகை கொண்டாட்டங்களுக்கும் அரசு தடை விதித்துள்ளது. இதன்படி, ஹோலி, சருல், ஷாப்-இ-பரத், நவராத்திரி மற்றும் ஈஸ்டர் உள்ளிட்ட அனைத்து பண்டிகைகளுக்கும் அனுமதி இல்லை. மக்கள் தங்களது வீடுகளில் குடும்ப உறுப்பினர்களுடன் ஹோலியை கொண்டாடி கொள்ளலாம் என தெரிவித்தது.
டெல்லியிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் ஹோலி உள்ளிட்ட பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுபற்றி டெல்லி போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், வர இருக்கிற ஹோலி, ஷாப்-இ-பரத் மற்றும் நவராத்திரி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை.
கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென கேட்டு கொள்கிறோம். மது குடித்து விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். போக்குவரத்து விதிகளை பின்பற்றுங்கள். ஹோலி அன்று ஹெல்மெட் இல்லாமல் செல்ல கூடாது. போக்குவரத்து விதிமீறல்கள் இருக்க கூடாது என கூறப்பட்டு உள்ளது.