வங்கிகள் தனியார்மயம்
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க உள்ளதாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக மத்திய அரசுடன் ஊழியர் சங்கங்களின் சார்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டன. ஆனால் அதில் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை
இதைத்தொடர்ந்து வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதாவது நேற்றும், இன்றும் இந்த வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடங்கினர். குறிப்பாக வங்கி ஊழியர்கள், மேலாளர்கள், அதிகாரிகள் என சுமார் 10 லட்சம் பணியாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு போராட்டங்களையும் மேற்கொண்டனர்.
இதனால் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் பெரும்பாலான கிளைகள் நேற்று மூடியே கிடந்தன. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. பணப்பரிமாற்றங்கள், காசோலை பரிமாற்றங்கள் என அனைத்துவிதமான சேவைகளும் முடங்கின. அந்தவகையில் ரூ.16,500 கோடி காசோலைகள் கிடப்பில் உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:-
மத்திய அரசு ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. வங்கியின் பெரும்பாலான பங்குகளை விற்றும், 14 பொதுத்துறை வங்கிகளை இணைத்தும் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் கடந்த 4, 9, மற்றும் 10-ந்தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்தால், வேலைநிறுத்த முடிவை நாங்களும் மறுபரிசீலனை செய்கிறோம் என வங்கி தொழிற்சங்க ஐக்கிய மன்றம் தெரிவித்தது. ஆனால் எங்களின் பரிந்துரையை அரசு ஏற்க மறுத்தது.
எனவே நாங்கள் இந்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இந்த வேலை நிறுத்தம் காலையிலேயே வெற்றிகரமாக தொடங்கி உள்ளது. ஊழியர்கள் மட்டுமின்றி அதிகாரிகள், மேலாளர்களும் அதிக எண்ணிக்கையில் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
இதனால் பல மாநிலங்களில் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பெரும்பாலான கிளைகளை திறக்க முடியவில்லை எனவும் தகவல் கிடைத்துள்ளது. வழக்கமான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், அரசின் கருவூல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வேலை நிறுத்தம் நாளையும் (இன்று) தொடரும். இந்த போராட்டம் எந்தவொரு ஊழியருக்கானது அல்ல. மாறாக தனியாரிடம் இருந்து நமது வங்கிகளை பாதுகாக்கவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. நமது மக்களின் சேமிப்பை பாதுகாக்க இது நடத்தப்படுகிறது. தேவைப்படுவோருக்கு கடன் வழங்குவதை உறுதி செய்வதற்கு இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
எனவே பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் எங்கள் போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவும், ஒத்துழைப்பும் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வெங்கடாச்சலம் கூறினார்.
வங்கி ஊழியர்களின் இந்த 2 நாள் வேலைநிறுத்தம் பொதுமக்களை கடுமையாக பாதித்து உள்ளது. ஏற்கனவே விடுமுறை தினங்களான கடந்த 13 மற்றும் 14-ந்தேதிகளையும் சேர்த்து தொடர்ந்து 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால் அவசர பணப்பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.