புதுடெல்லி,
நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந்தேதி தாக்கல் செய்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது ராணுவ முன்னாள் தலைமை தளபதி எம்.எம்.நரவனே எழுதி வெளிவராத புத்தகத்தின் கட்டுரையை மேற்கோள் காட்டி மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதனால் நாள் முழுவதும் சபை தள்ளி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் விவாதம் மக்களவையில் இன்று 2-வது நாளாக நடைபெற்றது. சபை கூடியதும் விவாதத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, ‘‘சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக ராணுவ முன்னாள் தளபதி தெரிவித்த கருத்துகளை தெரிவிக்க முடியாமல் நான் தடுக்கப்பட்டேன். நரவனேவின் சுயசரிதை தொடர்பான அந்த கட்டுரையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை நான் உறுதிப்படுத்தி உள்ளேன். அது பாதுகாப்பு தொடர்பானது’’ என கூறினார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, சபாநாயகரின் அனுமதி பெற்று ராகுல் காந்தி இது குறித்து பேச வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி, ‘‘நான் இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர். யாருடைய அனுமதியும் எனக்கு தேவை இல்லை’’ என்றார். அதற்கு கிரண் ரிஜிஜு, ‘‘யாராக இருந்தாலும் சபாநாயகரிடம் அனுமதி பெற்றே பேசுகிறார்கள். சபாநாயகரின் அனுமதி இன்றி யாரும் பேசுவது இல்லை’’ என குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘உறுதி படுத்தப்படாத ஆவணங்களை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த சட்ட விதிகளில் இடம் இல்லை. எனவே, அது குறித்து நீங்கள் பேசக்கூடாது. ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் அளவில் உங்கள் பேச்சு இருப்பதை உறுதிப்படுத்துங்கள்’’ என தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த ராகுல் காந்தி, ‘‘ஜனாதிபதி உரையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கிய விஷயம் தேசிய பாதுகாப்பு பற்றியது. பாகிஸ்தான், சீனாவுடன் இந்தியாவுக்கு இருக்கும் உறவு பாதுகாப்பு தொடர்பானதே. இந்த கட்டுரையில் மிக முக்கிய விஷயம் உள்ளது. அது பிரதமரின் எதிர்வினையை பற்றி பேசுகிறது’’ என்றார். இதற்கு பா.ஜனதா எம்.பி.க் கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். பதிலுக்கு காங்கிரஸ் எம்.பி.க் களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘அந்த கட்டுரையின் நகலை தயவு செய்து சமர்ப்பியுங்கள். நாங்கள் அதை ஆராய்ந்துவிட்டு உங்களிடம் தெரிவிக்கிறோம். எனவே, இப்போது ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மட்டும் உங்கள் விவாதத்தை தொடருங்கள்’’ என்றார். அப்போது பேசிய ராகுல் காந்தி, ‘‘நான் தொடர்பு இல்லாத எந்த ஒரு விஷயத்தை பற்றியும் பேசவில்லை. ஆனால், நான் தடுக்கப்படுகிறேன். சபாநாயகர் பேச அனுமதி மறுப்பது சரியல்ல’’ என குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ஆளும் கட்சி கூறியதற்காக எதிர்க்கட்சி தலைவர் பேசுவதை தடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை நான் பேசக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு எதிர்க்கின்றனர். நான் இன்று அவையில் பேசும் போது, நான் சுட்டிக்காட்டி பேச இருந்த இதழ் கட்டுரையின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். மரபுகளை மீறும் செயல் நீண்ட காலமாக உள்ள மரபு மற்றும் இதற்கு முந்தைய சபாநாயகர்கள் கடைபிடித்த விதிகள் என்னவென்றால், ஒரு அவையில் ஒரு ஆவணத்தைக் குறிப்பிட விரும்பும் உறுப்பினரே , அதைச் சரிபார்த்து, அதில் உள்ள கருத்துகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நடைமுறையை நான் முறையாகப் பின்பற்றினேன்.
இந்த அடிப்படை ஜனநாயாக உரிமைகளை மறுப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக அரசின் உத்தரவுக்கு இணங்கி, எதிர்க்கட்சி தலைவரை உரையாற்ற விடாமல் தடுக்கப்படுவதற்கு சபாநாயகர் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார்.