தேசிய செய்திகள்

பீட்டா புகார் மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானையை காட்டில் விட வேண்டும் என்று பீட்டா அமைப்பு கவர்னர் கிரண்பேடியிடம் புகார் அளித்திருந்தது. இதனையடுத்து யானையை காட்டில் விடும்படி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பேடி அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார். சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து கூறினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டமும் நடத்தினார்கள்.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள யானையை காட்டில் விட வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பீட்டா அமைப்பினர் கூறிய புகாரை அடுத்து இந்த உத்தரவை அவர் பிறப்பித்து உள்ளார்.

இந்த யானையை கான்கிரீட் தளத்தில் நிறுத்தி இருப்பதால் அதன் காலில் பாதிப்பு ஏற்பட்டு உடல்நலம் சீர்கெட்டு இருப்பதாகவும், எனவே, அந்த யானையை காட்டில் விட வேண்டும் என்று பீட்டா அமைப்பினர் கவர்னருக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கவர்னர் இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிகிறது.

கவர்னர் உத்தர விட்டுள்ள விஷயம் நேற்று சட்டசபையில் வெளியானது தி.மு.க. உறுப்பினர் சிவா இந்த தகவலை சட்டசபையில் வெளியிட்டார். மேலும் இதனால் பக்தர்களின் மனம் புண்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதுவை மணக்குள விநாயகர் கோவில் மிகவும் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதான பெண் யானை கொண்டு வரப்பட்டது. அதற்கு லட்சுமி என பெயர் சூட்டினார்கள்.

லட்சுமி யானை தினமும் கோவில் முன்பு நிறுத்தப்படுவது வழக்கம். அதனிடம் பக்தர்கள் ஆசிர்வாதம் வாங்கி செல்வார்கள். இப்போது அதை காட்டில் விட வேண்டும் என்று சொல்வதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.