தேசிய செய்திகள்

காநாடகத்தில் 6-வது நாளாக ராகுல்காந்தி பாதயாத்திரை

கர்நாடகத்தில் 6-வது நாளாக நேற்றும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடந்தது. அவர் மாணவர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

தினத்தந்தி

மண்டியா:

கர்நாடகத்தில் 6-வது நாளாக நேற்றும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடந்தது. அவர் மாணவர்கள், விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

காங்கிரஸ் பாதயாத்திரை

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் ஒற்றுமைக்கான பாதயாத்திரை நடத்தி வருகிறார். தமிழ்நாடு கன்னியாகுமரியில் கடந்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை, தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது.

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை வழியாக கர்நாடகத்துக்குள் வந்த பாதயாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாம்ராஜ்நகர், மைசூருவை தொடர்ந்து தற்போது மண்டியாவில் பாதயாத்திரை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பாதயாத்திரையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் பங்கேற்றார். அவர், 12 நிமிடங்கள் மட்டுமே பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றார்.

அவரது உடல் நிலையை காரணம் காட்டி மேற்கொண்டு பாதயாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என ராகுல்காந்தி, சோனியா காந்தியை காரில் அனுப்பி வைத்தார். பாதயாத்திரையில் சிறிது நேரமே பங்கேற்றாலும் சோனியா காந்தியின் வருகை கர்நாடக காங்கிரசார் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ராகுல்

இந்த நிலையில் கர்நாடகத்தில் 6-வது நாள் பாதயாத்திரை நேற்று நடந்தது. மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா கே.மாலேனஹள்ளி கிராமத்தில் இருந்து காலை 7 மணிக்கு பாதயாத்திரை தொடங்கியது. காலை முதலே ராகுல்காந்தி உற்சாகமாக நடந்தார். வழிநெடுகிலும் ஏராளமான மக்கள் அவரை வரவேற்றனர். மாணவர்களும், பெண்களும் அவருடன் சேர்ந்து சிறிது தூரம் நடந்தனர். ஏராளமானோர் ராகுல்காந்தியுடன் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

பாதயாத்திரையின்போது கன்னட ஆசிரியை ஒருவர் ராகுல்காந்தியை நோக்கி ஓடி வந்தார். அப்போது அவர் அணிந்திருந்த முககவசம் கழன்றது. இதனை கவனித்த ராகுல்காந்தி, அந்த முககவசத்தை சரி செய்தார். இது அந்த பெண் உள்பட அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பின்னர் அந்த பெண், ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். அவரது கையை பிடித்து ராகுல்காந்தி நடந்து சென்றார்.

கலந்துரையாடல்

பாதயாத்திர பகல் 11 மணி அளவில் அஞ்சே சித்தனஹள்ளி கிராமத்துக்கு வந்தபோது ஓய்வு அளிக்கப்பட்டது. அங்கு ராகுல்காந்தி ஓய்வெடுத்தார். மேலும் விவசாயிகள், மாணவர்கள், கிராம மக்களுடன் அவர் கலந்துரையாடினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டார். இதையடுத்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து பாதயாத்திரை மீண்டும் தொடங்கியது.

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு ராகுல்காந்தி புத்துணர்ச்சியுடன் நடந்தார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் நடந்து வந்தனர். காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்த பாதயாத்திரையில் பங்கேற்றனர். இரவு 7 மணி அளவில் பெல்லூர் டவுன் பகுதியில் ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறைவு செய்தார். மேலும் ஆதிசுஞ்சனகிரி மடத்தின் அருகே உள்ள மைதானத்தில் அவர் இரவு ஓய்வெடுத்தார். இங்கிருந்து இன்று (சனிக்கிழமை) 7-வது நாள் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடங்குவார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு