தேசிய செய்திகள்

பீகார்: பஸ்-வேன் மோதலில் 13 பேர் பலி; 30 பேர் காயம்

ஜார்கண்டில் இருந்து சொந்த ஊருக்கு 40 பேர் வரை வேனில் திரும்பி கொண்டிருந்தனர்.

பாட்னா

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.

இந்த தகவல் அறிந்து உடனடியாக போலீசார் விரைந்து சென்று, காயமடைந்த நபர்களை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக அறிவித்து உள்ளார்.

இந்த விபத்து பற்றி போலீசார் கூறும்போது, சம்பவ இடத்தில் 8 பேர் பலியானார்கள். சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்களில் 5 பேர் அதில் பலனின்றி உயிரிழந்தனர். காயமடைந்த பஸ் பயணிகள் கூறும்போது, பஸ் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டினார். வரும் வழியிலேயே 2 இடங்களில் பஸ்சை மோதினார். இந்த சூழலில், எதிரே வந்த வேன் மீது மோதியுள்ளார் என தெரிவித்தனர்.

ஆனால், போலீஸ் அதிகாரி சுஜீத் குமார் கூறும்போது, அடுத்தடுத்து நடந்த விபத்தில் 2 பைக்குகளும் சிக்கி கொண்டன. எனினும், பஸ் ஓட்டுநர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதற்கான சான்று எதுவும் இல்லை. அவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்.

ஜார்கண்டில் இருந்து சொந்த ஊருக்கு 40 பேர் வரை வேனில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 13 பேர் பலியாகி உள்ளனர் என அவர் கூறினார்.