பீகார்,
பீகார் மாநிலத்தில், தனது அப்பாவைக் கொன்றால், அவர் பார்க்கும் ரயில்வே வேலை தனக்கு கிடைக்கும் என கருதி கூலிப்படையை ஏவிய அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள ஜமல்பூர் ரயில்வே பணிமனையில் வேலை பார்ப்பவர் ஓம் பிரகாஷ் மண்டல். கடந்த 24-ம் தேதி இவரை இரண்டு பேர் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டனர். அந்த துப்பாக்கி சூட்டில் அவர் உயிர் தப்பினார். இருந்தாலும் இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை துப்பாக்கியால் சுட்டதாக அவர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணையில் இறங்கிய போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் இரண்டு பேர் ஒருவரை துப்பாக்கியால் சுடுவது பதிவாகி இருந்தது. இது குறித்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார் சுனில் குமார், ரவிரஞ்சன் குமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் போது அவர்கள் கூறியதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓம் பிரகாஷ் மண்டல், இந்த மாதம் 30-ம் தேதி வேலையில் இருந்து ஓய்வு பெறுகிறார். பணியில் இருக்கும் போதே அவர் இறந்தால் அந்த வேலை தனக்கு கிடைக்கும் என கருதிய அவரின் இளைய மகன் பவன் குமார் திட்டம் போட்டார். இதற்காக கூலிப்படையை தேடி கண்டுபிடித்தார். அவரின் திட்டத்தினை கூறிய அவர் இந்த வேலைக்காக ரூ.2 லட்சம் தருவதாக கூறினார். மேலும் முன்பணமாக ரூ.25,000 கொடுத்த அவர் மீதி பணத்தை வேலை முடிந்ததும் தருவதாக உறுதி அளித்தார். இதனால் அவர்கள் மண்டலை சுட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பின்னர் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான பவன் குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அங்கு அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.