தேசிய செய்திகள்

கள்ளக்காதலியை கரம்பிடிக்க 2-வது மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற கொடூரன்

குமார் தனது காதலியை திருமணம் செய்து கொள்வது குறித்து சுனிதாவிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

பீகாரில் நபர் ஒருவர் கள்ளக்காதலியை திருமணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டாவது மனைவியை தீ வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் குமார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25 வயது) என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகுதான் குமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் என்பது சுனிதாவுக்கு தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் குமாரின் குடும்பத்தினர் சுனிதாவை சமாதானப்படுத்தி அவருடன் வாழ வைத்துள்ளனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் பிறந்து சில நாட்களிலேயே உயிரிழந்து விட்டனர். இந்த சூழலில் குமார் தனது கள்ளக்காதலியை திருமணம் செய்வது குறித்து சுனிதாவிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுனிதா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

கடந்த மாதம் துர்கா பூஜை விழாவை முன்னிட்டு சுனிதாவின் வீட்டுக்குச் சென்ற குமார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தனது சகோதரரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய சுனிதா, குமார் தன் மீது பெட்ரோல் ஊற்றி, அறையில் அடைத்து, தீப்பற்ற வைத்ததாகவும், இனிமேல் நான் பிழைக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து அவரது செல்போன் துண்டிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அவரது குடும்பத்தினர் குமாரின் வீட்டுக்கு விரைந்து வந்துள்ளனர். அதற்குள்ளாக குமாரின் குடும்பத்தினர் சுனிதாவின் உடலை தகனம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் சுனிதாவின் குடும்பத்தினர் வருவதை கண்டதும் அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய குமாரின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.